Print this page

சட்டசபையில் எனது அனுபவம். குடி அரசு - மதிப்புரை - 01.02.1931 

Rate this item
(0 votes)

சென்ற சில ஆண்டுகளில் மாதர் முற்போக்கு எவ்வளவு முன்னேறியிருக்கிற தென்பதும் தங்கள் தற்கால நிலையறிந்து தங்கள் உரிமைகளைப் பெற எவ்வாறு முனைந்து நிற்கின்றனரென்பதற்கும் சமீபத்தில் நடைபெற்ற மாதர் மகாநாடுகளும், அவைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுமே போதிய சான்று கூறும். இந்தியாவிலேயே முதன் முதல் சட்டசபையில் ஸ்தானம் பெற்ற பெண் அங்கத்தினர் ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மையாரே யாகும். அதிலும் உபதலைவர் பதவி பெற்றது போற்றற்குறியதேயாகும். 

அம்மையார் அவர்கள் தனது சட்டசபை அனுபவத்தை (ஆங்கிலத்தில் எழுதி பிரசுரித்துள்ள பிரதி ஒன்று வரப்பெற்றோம். இதில் தான் பதவி வகித்து வந்த காலத்தில் தான் கொண்டு போன தீர்மானங்களின் விபரமும் அதையொட்டிய விவாதங்களும் சர்க்கார் தரப்பு பதிலும் அவை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட விபரமும் செவ்வனே விளக்கப்பட்டுள்ளது. தேவதாசி மசோதாவுக்கும் விபசார விடுதியொழிப்பு சட்டத்திற்கும் இருந்த எதிர்ப்புப் பல. அதன் முழு விபரங்கள் இதில் காணப்படுகின்றன. இதை முற்றும் படித்தவர்களுக்கு பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராடுவதில் எவ்விதத்திலும் ஆண்களைவிட இளைத்தவர்களல்ல என்பதும்.

ஆனால் தகுதியுடையவர்களே யென்பதும் விளங்கும். இதன் ஆசிரியை விரும்புவதே போல் குடும்ப நிர்வாகத்திற்கு பெண்களின் கூட்டுரவு எவ்வளவு அவசியமோ அதேபோல் தேச பரிபாலனத்திற்கும். அவர்கள் ஒத்துழைப்பும், உதவியும் வசியமென்பது புலப்படும். இப்புத்தகம் 247 பக்கம் கொண்டது. புஸ்தகம் 1க்கு விலை ரூ. 2-0-0. வேண்டுவோர் அவ்வம்மையாருக்கு எழுதவும். 

குடி அரசு - மதிப்புரை - 01.02.1931

Read 26 times